வாலிபர் குத்திக்கொலை


வாலிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2022 8:34 PM IST (Updated: 12 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்

கடையம்:
கடையம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி மலியலப்பபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (வயது 23). செங்கல் சூளை தொழிலாளி. அதே ஊரில் உள்ள மேலத்தெருவைச் சேர்ந்தவர் முப்பிலி மகன் துரை (23), வடக்கு தெருவைச் சேர்ந்தவா் டேனியல் ஆபிரகாம் மகன் சாம்பிளசன் (19). 
இவர்களுக்கு இடையே கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கோவில் விழாவில் கைகலப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் உள்ள அவ்வையார் கோவிலில் பொங்கல் பண்டிகைையயொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்த பூஜைக்கு மணிகண்டன் சென்றார். அங்கு துரை, சாம்பிளசன் ஆகியோரும் வந்தனர். 
அப்போது, துரை சட்டையை பிடித்து இழுத்த மணிகண்டன் நீ எப்படி சாம்பிளசனை கோவில் நிகழ்ச்சிக்கு அழைத்து வரலாம் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு இருந்த பெரியவர்கள், சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டனை அவரது சித்தப்பா ஆறுமுகத்தின் வீட்டில் அடைத்து வைத்தனர்.
குத்திக்கொலை
நள்ளிரவு 2  மணி அளவில் மணிகண்டன் வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தார். அப்போது, அங்கு திடீரென்று துைர, சாம்பிளசன் ஆகியோர் வந்தனர். 2 பேரும் ேசர்ந்து மணிகண்டனை தாக்கினார்கள். பின்னர் மணிகண்டனை சாம்பிளசன் பிடித்துக் கொள்ள துரை, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். ஆனால், அதற்குள் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட துரை, சாம்பிளசன் ஆகியோர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
2 பேர் கைது
இதுகுறித்து உடனடியாக கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய துரை, சாம்பிளசன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரும் தொழிலாளியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story