வடமாநில இளம்பெண் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1¾ லட்சத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்


வடமாநில இளம்பெண் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1¾ லட்சத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:53 PM GMT (Updated: 12 Jan 2022 5:53 PM GMT)

வடமாநில இளம்பெண் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1¾ லட்சம் மற்றும் நகை, செல்போன் ஆகியவற்றை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார். அவரை போலீசார் பாராட்டினர்.

வேலூர்

வடமாநில இளம்பெண் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1¾ லட்சம் மற்றும் நகை, செல்போன் ஆகியவற்றை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார். அவரை போலீசார் பாராட்டினர்.

பணத்தை தவறவிட்ட பெண்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சலிகுமாரி (வயது 22). இவரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக  குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து வேலூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வாடகைக்கு எடுத்து தாயாருக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் பில்டர்பெட் சாலையில் இருந்து மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றார். அப்போது தனது கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டார். அந்த கைப்பையில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் தங்க மோதிரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

போலீசில் ஒப்படைப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலிகுமாரி அப்பகுதி முழுவதும் அந்த ஆட்டோவை தேடி பார்த்தார். எனினும் அந்த ஆட்டோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் அஞ்சலிகுமாரி பயணம் செய்த ஆட்டோவில் கைப்பை கிடந்ததை ஆட்டோ டிரைவரான அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த சந்திரபாபு (63) என்பவர் பார்த்தார். அதில், பணம் மற்றும் பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசனிடம் அதை ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அஞ்சலிகுமாரியும், கைப்பை மாயமானது குறித்து புகார் அளிக்க அங்கு வந்தார். பின்னர் அஞ்சலிகுமாரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரிடம் பணம் மற்றும் பொருட்களை ஒப்படைத்தனர். நேர்மையாக இருந்த ஆட்டோ டிரைவரை சந்திரபாபுவையும் போலீசார் பாராட்டினர்.

Next Story