மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை + "||" + Sale of Pongal items

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர்
உழவர்களின் திருநாள், உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருநாளாக பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, பானைகளில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசி தொகுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மண்பானைகள்-கரும்பு கட்டுகள்
பொங்கல் பண்டிகையையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், காமராஜர் வளைவு, சங்குபேட்டை, ரோவர் வளைவு, பாலக்கரை ரவுண்டானா பகுதி, துறையூர் ரோடு, ஆத்தூர் ரோடு, புதிய பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் கரும்பு கட்டுகள், மஞ்சள் குலை, வாழைத்தார்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதே போல, பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் மண் பானைகளின் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. பொங்கல் சீர்வரிசை கொடுக்க, வீட்டிற்கு பொங்கலிடுவதற்கு உள்ளிட்டவற்றுக்காக அளவிற்கேற்றாற்போல் மண்பானை, அடுப்புகள், மண்ணாலான மூடிகள் மற்றும் கரும்பு கட்டுகள், மஞ்சள் குலை, வாழைத்தார்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
கூட்டம் அலைமோதல்
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காகவும், பொங்கல் சீர் கொடுப்பது உள்ளிட்டவற்றுக்காக பொருட்கள் வாங்க பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வருகை தந்து தங்களுக்கு தேவையானவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் புத்தாடைகள் உள்ளிட்டவை எடுப்பதற்காக கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளிவாசல் தெரு, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கும், பூ, பழம் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கலர் கோலப்பொடியின் விற்பனையும் நடைபெற்றது. மாடுகளுக்கான மூக்கணாங்கயிறு, கழுத்து மணி, கொம்புகளில் கட்டப்படும் கயிறு ஆகியவற்றின் விற்பனையும் படுஜோராக நடந்தது.