தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
ஆரல்வாய்மொழி,
பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி பிச்சி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
தோவாளை
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் நெல்லை மாவட்டத்தின் காவல்கிணறு, ஆவரைக்குளம் ஆகிய பகுதியில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது.
இவற்றை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பூக்களை வாங்கிச் செல்ல வியாபாரிகள் அதிகாலையிலேயே வருகை தருகின்றனர். மேலும் வெளி நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிச்சி ரூ.2 ஆயிரத்துக்கு...
இந்தநிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை வருவதால் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் ரூ.1250-க்கும் விற்பனையான பிச்சி நேற்று ரூ.750 உயர்ந்து ரூ.2000-ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ரூ.1200-க்கு விற்பனையான மல்லிகை ரூ.500 உயர்ந்து ரூ.1700-க்கு, ரூ.1200-க்கு விற்பனையான முல்லை ரூ.700 உயர்ந்து ரூ.1900-க்கும் விற்பனையானது.
விலை விவரம்
மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.300, சம்பங்கி ரூ.150, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ.150, துளசி ரூ.40, தாமரை (ஒரு எண்ணம்)ரூ.10, கோழிப்பூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு) ரூ.10, ரோஸ் பாக்கெட்(100 எண்ணம்) ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.120, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு)ரூ.250, மஞ்சள் கிரேந்தி ரூ.60, சிவப்பு கிரேந்தி ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.180, வெள்ளை சிவந்தி ரூ.220, கொழுந்து ரூ.200, மரிக்கொழுந்து ரூ.150 என விற்பனையானது.
Related Tags :
Next Story