மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்அமைச்சர் கே.என்.நேரு பேச்சு + "||" + Speech by Minister KN Nehru

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
சேலம்,
நன்றி தெரிவிக்கும் கூட்டம்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 51 ஆயிரத்து 17 விவசாயிகளுக்கு ரூ.501 கோடியே 69 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க அரசு ஆணையிட்டு உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. 
இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் விஜயசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இலவச மின்சார திட்டம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 1989-ம் ஆண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். அதே போன்று 1996-ம் ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது நபார்டு வங்கியிலிருந்து விவசாயிகள் கடன் பெற்ற போது 9 சதவீத வட்டி செலுத்த வேண்டி இருந்தது. அதில் 2 சதவீதம் குறைத்து விவசாயிகளிடம் 7 சதவீத வட்டி மட்டுமே வசூல் செய்யப்பட்டது. மீதி 2 சதவீதம் அரசு மூலம் செலுத்தப்பட்டது. பின்னர் 7 சதவீத வட்டியை 3 சதவீதமாக கருணாநிதி குறைத்தார். அதன்பிறகு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் கருணாநிதி வழங்கினார்.அந்த வகையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து உள்ளார்.
உறுதுணையாக
எனவே இதுபோன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் ஒருபோக சாகுபடி செய்கின்ற நிலப்பரப்பை இருபோக சாகுபடி பரப்பாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக தஞ்சையில் அனைத்து வாய்க்கால்களையும் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக அனைத்தையும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து நிறைவேற்றுகின்ற அரசாக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு இருக்கும். எனவே அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பூசாரிகளுக்கு புத்தாடை
முன்னதாக சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 81 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள் மற்றும் பூசாரிகள் என 109 பேருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு புத்தாடைகள் வழங்கினார். அதே போன்று கோவில்களில் பணியாற்றி வரும் 178 ஆண், 130 பெண் பணியாளர்கள் என மொத்தம் 308 பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்வேலவன், உதவி ஆணையர் உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அரசு அலுவலர்களுக்கு உறுதுணையாக இருப்போம்’ அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
‘அரசு அலுவலர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.