நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Jan 2022 2:43 PM GMT (Updated: 13 Jan 2022 2:43 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்:
வைகுண்ட ஏகாதசியையொட்டி நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்யபூஜை நடந்தது. தொடர்ந்து ஆகம முறைப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாக கூடையில் வைத்து ஜடாரியை கொண்டு வந்தனர். இதில் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
போலீஸ் பாதுகாப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி சாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு வழக்கமாக பிரசாதமாக லட்டு வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக லட்டு வழங்கப்படவில்லை. மேலும் சாமி தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.
இதையொட்டி கோவில் முன்பும், சாலைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் இலவச பாஸ் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ரூ.25-ம், விரைவு தரிசனத்திற்கு ரூ.100-ம் வசூல் செய்யப்பட்டது. இதையொட்டி நாமக்கல் பிரதான சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 

Next Story