மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு ஓடும் காரில் பயங்கர தீ வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் + "||" + Stir in Dindigul Terrible fire in a running car Motorists scream and run

திண்டுக்கல்லில் பரபரப்பு ஓடும் காரில் பயங்கர தீ வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்

திண்டுக்கல்லில் பரபரப்பு ஓடும் காரில் பயங்கர தீ  வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்
திண்டுக்கல்லில், ஓடும் கார் கொழுந்து விட்டு தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 40). இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர், தனது காரை பழுது நீக்கம் செய்வதற்காக திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் ஒர்க்‌ஷாப்பில் விட்டு சென்றார். 
இந்தநிலையில் தனது காரை எடுத்து செல்வதற்காக பக்ருதீன் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். இதனையடுத்து பழுது நீக்கப்பட்ட தனது காரை எடுத்து கொண்டு, திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டார்.
பயங்கர தீ 

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில், எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே ெரயில்வே மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. 
இதனையடுத்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், முந்தி சென்று காரில் இருந்து புகை வருவதாக பக்ருதீனிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நடுரோட்டில் காரை நிறுத்தி கீழே இறங்கினார். சிறிதுநேரத்தில் மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் அக்னி ஜூவாலையாக காட்சி அளித்தது. 
இதனை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சாலை முழுவதும் பரவிய அந்த தீயை அணைக்க முடியாமல் செய்வதறியாது திகைத்தனர்.

காரணம் என்ன?
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் எரிந்து எலும்புக்கூடானது. 
திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரில் உள்ள வயர்களில் மின்கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்து இருப்பது தெரியவந்தது.