பாசனத்துக்காக வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு


பாசனத்துக்காக வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 4:51 PM GMT (Updated: 13 Jan 2022 4:51 PM GMT)

வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

விக்கிரவாண்டி, 


அமைச்சர் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகுமார், புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு அணை மதகில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். அப்போது செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-

தண்ணீரை சிக்கனமாக...

வீடூர் அணை பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், துணைத் தலைவர் சங்கர்,  வி.சி.க. மாவட்ட செயலாளர் சேரன், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருவேங்கடம், புருஷோத்தமன் மற்றும் பாசன விவசாய சங்க நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story