பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


பள்ளிகொண்டா  உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 5:51 PM GMT (Updated: 13 Jan 2022 5:51 PM GMT)

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

அணைக்கட்டு

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. நேற்று அதிகாலை உற்சவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் 6 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கருடவாகனத்தில் உற்சவர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொரோனா கட்டுப்பாட காரணமாக 100 பக்தரகளுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் கூட்டம் குறைவாகவே இருந்தது. சொர்க்க வாசல் திறக்கப்பட்ட பின்னர் காலை 7 மணிமுதல் இரவு 8 மணவரை சமூக இடைவெளியுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வேலழகன், மேற்கு மாவட்ட செயலாளர் அப்பு, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு, நகர செயலாளர் உமாபதி, அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் ஆனந்தன், பள்ளிகொண்டா நகர தி.மு.க. செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

காட்பாடி

காட்பாடி தாலுகா பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் ெசய்தனர். சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் ஆர். சுந்தரராஜி செய்திருந்தார்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அடுத்த நாகல் பண்டரி பஜனை குழுவினரின் 195-ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மேள, தாள இசையுடன் அய்யப்பன், பிள்ளையார், ஆஞ்சநேயர், ராமர், நாரதர் வேடங்களை அணிந்து நாகல் திருமால் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு கே.ஏ.மோட்டூர், ஐதர்புரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில் வரை  சென்றனர். வழியில் சுவாமி வேடங்களில் இருந்த பக்தர்களை பாதபூஜை செய்து ஊர் மக்கள் வழிபாடு செய்தனர்.

Next Story