மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை


மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2022 6:02 PM GMT (Updated: 13 Jan 2022 6:02 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று நடைபெற்றது.

திருவரங்குளம்:
பொங்கல் பண்டிகை 
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த போதிலும் பொதுமக்கள் சிலர் தங்கள் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் மண் பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர். இதனால் தற்போது மண்பானை விற்பனை சற்று அதிகரித்துள்ளது. 
மண்பானைகள் விற்பனை 
இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆங்காங்கே கிராமங்களில் காய்கறி கடைகள் போல் மண்பானை கடைகளும் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் மண்பானைகள் விற்பனையும் தீவிரமடைந்துள்ளது. மண்பாண்ட வியாபாரிகளுக்கு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வியாபாரம் ஆகும். லாபம் இல்லாத போதிலும் இந்த தொழிலை விட முடியாமல் பலர் செய்து வருகின்றனர். இத்தொழிலை தொடர்ந்து செய்திட அரசு நிவாரணம் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் முன் மண்பானைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.
பொன்னமராவதி
பொன்னமராவதி அண்ணாசாலையில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொங்கல் பொருட்களை வாங்க அங்குள்ள கடைகளில் கூட்டம் கூட்டமாய் குவிந்தனர்.
மணமேல்குடி
மணமேல்குடி கடைவீதியில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கரும்பு, மஞ்சள் என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் மக்கள் கடைவீதியில் கூடியதால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரும்பு சாகுபடி
இலுப்பூர், சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, பெருஞ்சுனை, சிறுஞ்சுனை, செல்லுகுடி, குருக்களையாப்பட்டி, எல்லைப்பட்டி, நார்த்தாமலை, சித்துப்பட்டி, கூத்தினிப்பட்டி, வயலோகம் உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் கரும்பு தோட்டத்திற்குள் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் சரியான நேரத்திற்கு உரம் வைக்க முடியவில்லை. இதனால் கரும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் அப்பகுதிகளில் கரும்புகள் அதிக அளவு அறுவடை தொடங்கியது. தற்சமயம் அறுவடை செய்யப்படும் இடத்தில் இருந்து வியாபாரிகள் ஒரு கரும்பை ரூ.17 முதல் ரூ.20 வரையிலும் ஒரு கட்டை ரூ.170 முதல் ரூ.200 வரையிலும் வாங்கி செல்கின்றனர். சென்னப்பநாயக்கன்பட்டியில் இருந்து கரும்பு கட்டுக்கள் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் ஏற்றி செல்லப்படுகிறது
குறைந்த விலைக்கு...
கரும்பு விவசாயிகள் கூறுகையில், கரும்பு ஓராண்டு கால பயிர், நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் சாகுபடி செய்தோம். அவைகள் தற்போது அறுவடை செய்ய தொடங்கி விட்டோம். இந்தாண்டு அதிக மழையின் காரணமாக உரம் வைக்க முடியவில்லை. இதனால் கரும்பு எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையவில்லை. இதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை தோட்டத்திற்கு வெளியில் சில்லறையாக கரும்பு ஒன்று ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கின்றோம். ஆனால் மொத்தமாக விற்கும் போது குறைந்த விலைக்குதான் விற்கின்றோம் என்றனர்.
ஆலங்குடி
ஆலங்குடி வாரச்சந்ைதயில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் தேங்காய், வாழைப்பழம் மஞ்சள்கொத்து, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
வடகாட்டில் வெளியூர்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வந்திருந்த மண் பானைகள் விற்பனை களைகட்டியது. மாங்காடு கமிஷன் கடை ஒன்றில் வாழைத்தார்கள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்து குவித்து வைத்து இருந்தனர். 

Next Story