மயிலாடுதுறை-சீர்காழியில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை அமோகம்


மயிலாடுதுறை-சீர்காழியில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 13 Jan 2022 6:08 PM GMT (Updated: 13 Jan 2022 6:08 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. இதனால் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.

மயிலாடுதுறை:
பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. இதனால் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.
பொங்கல் பொருட்கள்
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு அறுவடை பண்டிகை ஆகும். இந்த பொங்கல் பண்டிகை அன்று திருமணமான பெண்களுக்கு, அவர்களுடைய தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். இந்த பொங்கல் சீர்வரிசையில் கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், மற்றும் சில்வர், பித்தளை பாத்திரங்கள் இடம்பெறும். 
இதேபோல தங்கள் வீடுகளிலும் மண்பானையில் அல்லது புதிய பாத்திரங்களில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அப்போது கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள் இடம்பெறும். இத்தகைய சிறப்புமிக்க தைப்பொங்கல் பண்டிகையை இன்று தமிழர்கள் உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். இந்தநிலையில் மயிலாடுதுறை நகரில் பொதுமக்கள் நேற்று பொங்கல் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 
கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
மயிலாடுதுறை பெரியகடை வீதி, மகாதானத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, பூக்கடைத்தெரு, ெரயிலடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் கரும்பு, மஞ்சள், பூ, பழம் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் கடைவீதி, சாலைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. 
சீர்காழி
சீர்காழி கடைவீதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, வாழை, பூக்கள், காய்கறிகள், மளிகைப்பொருட்கள், இஞ்சி, மஞ்சள் கொத்து, நெட்டி மாலை, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானோர் கடைவீதியில் குவிந்தனர். 
இதனால் கடைவீதி, காமராஜ் வீதி, பிடாரி வடக்குவீதி, பழைய பஸ்  நிலையம் சாலை, ஈசானிய தெரு, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நேரிசலாக காணப்பட்டது.

Next Story