சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் ரத்து; பக்தர்கள் இல்லாமல் நடத்த கோவில் நிர்வாகத்துக்கு அனுமதி


சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் ரத்து; பக்தர்கள் இல்லாமல் நடத்த கோவில் நிர்வாகத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 13 Jan 2022 8:23 PM GMT (Updated: 13 Jan 2022 8:23 PM GMT)

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச ேதரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக வருவாய் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் இல்லாமல் நடத்த கோவில் நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக வருவாய் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் இல்லாமல் நடத்த கோவில் நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 
சென்னிமலை முருகன் கோவில்
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா ஆண்டுதோறும் 2 வாரங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியதால் தேரோட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் கடந்த 8-ந் தேதி பெருந்துறை தாசில்தார் கார்த்தி தலைமையில் சென்னிமலையில் நடைபெற்றது. அப்போது சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
நாளுக்கு நாள்...
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக வருவாய் துறை மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பெருந்துறை தாசில்தார் கார்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறைந்த நாட்களாவது தேர்த்திருவிழாவை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 14-ந் தேதி (அதாவது இன்று வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. 
பக்தர்கள் வருத்தம்
இந்த நிலையில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகமாக பரவி பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் தேர் வடம் பிடிக்கும் நாளான வருகிற 18-ந் தேதி மற்றும் தேர் நிலை சேரும் நாளான 19-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அந்த நாட்களில் கோவிலுக்குள் செல்ல உள்ளூர், வெளியூர் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அதேசமயம் விழாவை கோவில் நிர்வாகமே கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். 
இதன்மூலம் தேரோட்டம் நடைபெறாமல் சிறப்பு பூஜைகள் மட்டும் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் வருத்தம் அடைந்து உள்ளனர். 

Next Story