நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மடிப்பிச்சை ஏந்தி ஆர்ப்பாட்டம்


நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மடிப்பிச்சை ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2022 8:25 PM GMT (Updated: 13 Jan 2022 8:25 PM GMT)

பட்டுக்கோட்டையில், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்காததை கண்டித்து மடிப்பிச்சை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்காததை கண்டித்து மடிப்பிச்சை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மடிப்பிச்சை ஏந்தி ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 97 பேரும், சுய உதவிக்குழு மூலம் இயங்கி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 48 பெண்கள் உள்பட 126 பேரும் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒப்பந்த பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்காததை கண்டித்து நேற்று காலை 6 மணி முதல் 8.30 மணி வரை நகராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் வைப்பதற்கு பணம் இல்லை என்று கூறி மடிப்பிச்சை ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர். 
இந்த போராட்டத்திற்கு தூய்மை பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு தொகையை(இ.பி.எப்) நகராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செலுத்தாததால் எங்களது உழைப்புக்கு ஊதியம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க மறுக்கும் நகராட்சியை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்றார். 
ஆணையர் பேச்சுவார்த்தை
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதை அறிந்து நகராட்சி ஆணையர் சுப்பையா மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்திய துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது உடனடியாக சம்பளத்தை ரொக்கமாகவே வழங்கப்படும் என்றும், தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றித் தரப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு துப்புரவு தொழிலாளர்கள் மீண்டும் பணிக்்கு திரும்பினார்.

Next Story