மாவட்ட செய்திகள்

வைகுண்ட ஏகாதசியையொட்டிபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புநீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் + "||" + Heavens Gate Opening

வைகுண்ட ஏகாதசியையொட்டிபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புநீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டிபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புநீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சேலம், 
வைகுண்ட ஏகாதசி
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி ஆகும். சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் என்றழைக்கப்படும் அழகிரிநாத சாமி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
சொர்க்கவாசல் திறப்பு
அதனை தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு வடக்கு பகுதியில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் ‘பரமபத வாசல்' என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.
சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கொரோனா பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் அவர்கள் அதிகாலையிலேயே கோவில் முன்பு திரண்டனர். ஒரு மணி நேரத்துக்கு 1,500 பேர் மட்டுமே சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நெரிசல் இன்றி செல்லும் வகையில் கோவிலின் முன்பு இருப்புறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களின் உடல்நிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரசன்ன வரதராஜபெருமாள் கோவில்
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் டவுன் பட்டைக்கோவில் என்று அழைக்கப்படும் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பாண்டுரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பாண்டுரெங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி, அம்மாபேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில்,  பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில் என மாநகரில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காருவள்ளி, மல்லிகுட்டை
ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கடரமணர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெருமாள், நாச்சியார் புறப்பாடு நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பரமபத வாசல் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதேபோல் மல்லிகுட்டை சென்றாய பெருமாள் கோவில், வீரபாண்டியை அடுத்துள்ள பாலம்பட்டி ஆலமரத்து காடு எல்லை பெருமாள் கோவில், சங்ககிரி வி.என்.பாளையம் வசந்த வல்லபராயர் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.