பொங்கல் பண்டிகை களை கட்டியது


பொங்கல் பண்டிகை களை கட்டியது
x
தினத்தந்தி 13 Jan 2022 9:04 PM GMT (Updated: 13 Jan 2022 9:04 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை களை கட்டியது. மண்பானை, கரும்பு விற்பனை அமோகமாக நடந்தது.

தர்மபுரி:-
தர்மபுரி நகரில் புதுதுணிகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க நேற்று ஏராளமானோர் குவிந்தனர். மஞ்சள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள், கோலப் பொடிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பொங்கல் விழாவில் முக்கிய இடம் வகிக்கும் கரும்பு பொங்கல் பானை ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பொங்கல் பானைகள் ரூ.50 முதல் ரூ.500 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் கரும்பு, பொங்கல் பானை, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
இதேபோல் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அலங்கரிக்கும் மஞ்சள் கொம்பு, அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த பொருட்களை வாங்கிச் சென்றனர். பல்வேறு வகையான பூக்கள் விற்பனையும் களை கட்டியது. தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story