‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 14 Jan 2022 11:37 AM GMT (Updated: 14 Jan 2022 11:37 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்வாரியத்தின் பொறுப்பான நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடப்பாளையத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவில் தெருவில் மின்சார வயர்கள் கைக்கு எட்டும் தொலைவில் ஆபத்தான நிலையில் செல்வது குறித்து ‘தினத்தந்தி‘ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து மின்வாரியம் சார்பில் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆபத்து நீங்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ‘தினத்தந்தி’க்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.




அசுத்தமான இடம் தூய்மையானது

சென்னை சாலிகிராமம் பொன்னியம்மன் கோவில் தெரு அருகே உள்ள சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும், ‘பாராமவுண்ட் கார்டன்’ பகுதியில் கழிவுநீர் தேங்கியிருப்பதும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்துள்ளனர்.

சாலை மோசம்

சென்னை அம்பத்தூர் அயப்பாக்கம் பெரிய கோலடி சாலை தண்ணீர் லாரிகள் அதிகம் செல்லும் பாதை ஆகும். இந்த சாலை குண்டும், குழியுமாகவும், கரடு-முரடாகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும்போது தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்லும்போது சாகச பயணம் செய்வது போன்று இருக்கிறது. எனவே இந்த சாலையை செப்பனிட்டு தர வேண்டும்.

-வாகன ஓட்டிகள்.

வேகத்தடை, சிக்னல் வேண்டும்

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் இந்த பள்ளிக்கூடம் அருகே போக்குவரத்து சிக்னலோ, வேகத்தடையோ இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையை கடக்கும் நிலை இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சமூக ஆர்வலர் கமலக்கண்ணன், பள்ளிக்கரணை.

சாலை எப்போது சீரமைக்கப்படும்?

சென்னை அடையார் பகுதியில் வெங்கட்ரத்தினம் நகர், காமராஜர் அவென்யூ, நேரு நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் பள்ளிக்கூடம், பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும்.

-த.சிவா, அடையார்.

மின்வாரியம் கவனத்துக்கு...

சென்னை மேடவாக்கம் ஊராட்சி 12-வது வார்டு வாஞ்சிநாதன் தெருவில் வீட்டை உரசியவாறு மின்கம்பம் செல்கிறது. சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் எலிகான் தெருவில் மின் இணைப்பு பெட்டி மூலம் ஆபத்தான முறையில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெருவில் மின்கம்பம் பலவீனமான நிலையில் இருக்கிறது. இப்புகார்கள் மீது மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்பகுதி பொதுமக்கள்.

தேங்கி கிடக்கும் மரக்கழிவுகள்

சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 2 மற்றும் 5-வது தெரு சந்திப்பில் நீண்ட நாட்களாக மரக்கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இந்த இடம் கொசுக்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாக உள்ளது. அண்ணாநகர் கிழக்கு எல்.பிளாக் 21-வது தெரு முக்கோண பூங்கா அருகே கடந்த 20 நாட்களாக மரக்கழிவுகள் அகற்றப்படாமல் அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இந்த புகார்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சமூக ஆர்வலர்கள்.



கழிவுநீர் பிரச்சினை

சென்னை பொழிச்சலூர் ராமநாதன் நகர் மு.க.ஸ்டாலின் தெரு, குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு ஊராட்சி கோட்ரஸ் திருவள்ளுவர் தெரு ஆகிய இடங்களில் கழிவுநீர் பிரச்சினையால் இன்னல்கள் ஏற்படுகிறது. செனாய் நகர் கான்வென்ட் தெருவில் உள்ள தனியார் பள்ளி எதிரே உள்ள பகுதியிலும், மசூதி அருகேயும் மழைநீர் வடிகாலில் சாக்கடை நீர் கலந்து சாலையில் ஓடுகிறது. பிரச்சினை சரி செய்யப்படுமா?

பாழடைந்த வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் ஓடாத வாகனங்கள், பாழடைந்த வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காட்சி பொருளாக இருக்கும் இந்த வாகனங்களை ஏலமிட்டு அந்த தொகையை அரசு கருவூலத்தில் சேர்த்தால் பயன் உள்ளதாக அமையும்.

- சமூக ஆர்வலர்.


ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

வடசென்னையில் உள்ள எர்ணாவூர் குட்டையை ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே இந்த ஆகாயத்தாமரையை அகற்றி, குட்டையை மீட்டெடுக்க வேண்டும்.

-நிரஞ்சன், காமராஜ் நகர்.

தெற்கு ரெயில்வே கவனத்துக்கு...

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 5, 6, 7, 8 ஆகிய பிளாட்பாரங்களில் உள்ள நடைபாதை பொலிவிழந்து உள்ளது. தரை சீராக இல்லாமல் கரடு, முரடாக இருப்பதால் உடமைகள் அடங்கிய சூட்கேஸ்களை இழுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரெயில் நிலையத்தில் உள்ள குறைபாடுகளுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் விரைவில் தீர்வு காண வேண்டும்.

-சாம் ஜெயபால், பல்லாவரம்.

காட்சி பொருளான குடிநீர் குழாய்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி 14-வது வார்டு குப்புசாமி நாயக்கர் தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் கடந்த ஓராண்டாக தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் குடிநீர் குழாய்கள் வெறும் காட்சி பொருளாக மட்டும் இருக்கிறது. இப்புகார் மீது தீர்வு கிடைக்குமா?

-அப்பகுதி குடியிருப்புவாசிகள்.





Next Story