மாட்டுப்பொங்கலை முன்னிட்டு வீடுகள், கோசாலைகளில் வழிபாடு


மாட்டுப்பொங்கலை முன்னிட்டு வீடுகள், கோசாலைகளில் வழிபாடு
x
தினத்தந்தி 15 Jan 2022 1:09 PM GMT (Updated: 15 Jan 2022 1:09 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மாட்டு பொங்கலையொட்டி பொதுமக்கள் வீடுகள் மற்றும் கோசாலைகளில் கோமாதாவிற்கு பொங்கலிட்டு வழிபாடு செய்து, கொண்டாடினர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாட்டு பொங்கலையொட்டி பொதுமக்கள் வீடுகள் மற்றும் கோசாலைகளில் கோமாதாவிற்கு பொங்கலிட்டு வழிபாடு செய்து, கொண்டாடினர்.
மாட்டுப்பொங்கல்
உழவர்களின் நண்பன் என்று போற்றப்படும் மாடுகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாளை மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கலாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் மக்களின் வாழ்வோடு ஒன்றிய பசுவுக்கும், காளைகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தெய்வங்கள் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
கோசாலையில் வழிபாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
அந்த வகையில் தூத்துக்குடியில் நேற்று வீடுகள், தோட்டங்கள் மற்றும் கோசாலைகளில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலையொட்டி கோசாலையில் உள்ள அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக்கயிறு கட்டி, மாலை அணிவித்து மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். 
மாட்டு தொழுவத்திற்கு முன்னால் காய்கறி மற்றும் பழ வகைகளை கொண்டு படையல் செய்து மாடுகளுக்கு பொங்கல், பழம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை உணவாக வழங்கினார்கள்.
பின்னர் மாட்டுத் தொழுவத்தின் முன்பு புதுப்பானையில் பொங்கலிட்டனர் பொங்கல் பொங்கி வரும் பொழுது சங்கொலி முழங்க கோமாதாவிற்கு பூஜை செய்தனர்.

Next Story