முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவிப்பு


முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2022 3:16 PM GMT (Updated: 15 Jan 2022 3:16 PM GMT)

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்கின் 181-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணையை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த என்ஜினீயர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார். பென்னிகுவிக் லண்டனில் உள்ள தனது சொத்துகளை விற்று தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் இந்த அணையை கட்டினார். இதனால், ‘முல்லைப்பெரியாறு அணையின் தந்தை' என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார்.
பென்னிகுவிக்கின் நினைவாக அவருக்கு தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் நினைவு மணிமண்டபமும், அவருடைய முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
நேற்று அவருடைய 181-வது பிறந்தநாள் ஆகும். இதை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவருடைய முழு உருவச்சிலைக்கு தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் மாலை அணிவித்து அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
ஓ.பன்னீர்செல்வம்
பென்னிகுவிக் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், பென்னிகுவிக் புகழை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி கடந்த 2013-ம் ஆண்டு நேரில் வந்து அதை திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி தேனி நகரில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. லண்டனில் அவரது கல்லறை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 
முல்லைப்பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம் தலைமையில் விவசாயிகள் பொங்கல் வைத்து பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஆதிமூலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் பா.ஜனதா, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குழு, பார்வர்டு பிளாக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேவாரம் லயன்ஸ் கிளப், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாலார்பட்டி கிராமமக்கள்
போடி தாலுகா பாலார்பட்டி கிராம மக்கள் கடந்த 2000-ம் ஆண்டு முதல் பென்னிகுவிக் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள பூஜை அறைகளிலும் பென்னிகுவிக் உருவப்படம் இடம் பெற்று உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று 23-வது ஆண்டாக பென்னிகுவிக் பிறந்த நாள் விழா பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு படையலிட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கு பென்னிகுவிக் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆண்டி தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டனர். 
தேனியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பென்னிகுவிக் உருவப்படத்துக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பெரியணன், செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் மன்னார்சாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதுபோல தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பென்னிகுவிக் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 

Next Story