நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க 30 கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம்


நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க 30 கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 Jan 2022 3:25 PM GMT (Updated: 15 Jan 2022 3:25 PM GMT)

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க 30 கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஊட்டி

நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க 30 கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தொற்று பாதிப்பு அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறிகள் இல்லாமல் உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அதே போல் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகளில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து வீட்டு தனிமையில் உள்ள நபர்களை தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களது உடல்நிலை கேட்டறிந்து மருந்து, மாத்திரை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. 

30 இடங்கள்

ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதித்திருந்தால், அப்பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்த படுகிறது. அதன்படி நீலகிரியில் கொரோனா பாதிப்பால் 30-க்கும் மேற்பட்ட இடங் கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 30 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்கே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. 

பொதுமக்கள் நடமாட தடை

மருத்துவ குழுக்கள் மூலம் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதித்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரோனா பரிசோதனை போன்ற தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கட்டுப்பாட்டு பகுதி களில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீஸ் மூலம் தடுப்புகள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைகளுக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

ஊட்டி நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுவதோடு, தொற்று பரவலை தடுக்க கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story