காமயகவுண்டன்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


காமயகவுண்டன்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 15 Jan 2022 3:31 PM GMT (Updated: 15 Jan 2022 3:32 PM GMT)

காமயகவுண்டன்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

உத்தமபாளையம்:
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்த குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டது. இதனால் 7, 8, 9 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிப்படைந்தது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் பொங்கல் அன்று அங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் மரக்கிளைகளை சாலையில் வெட்டி போட்டு மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன், பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story