துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்


துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 15 Jan 2022 3:41 PM GMT (Updated: 15 Jan 2022 3:41 PM GMT)

நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

வெளிப்பாளையம்:
நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
மாட்டுப்பொங்கல்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய உதயத்தின் போது வீட்டின் முற்றத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடு செய்தனர். 
இதை தொடர்ந்து நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் மனிதனுக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக இந்தநாள் கொண்டாடப்படுகிறது.
மீன்கள் வாங்க குவிந்தனர்
மாட்டுப்பொங்கலையொட்டி தமிழர்கள் தங்களது முன்னோர்களுக்கு மீன், இறைச்சி, பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து படைத்து வழிபடுவது வழக்கம். இதனால் இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
அதன்படி மாட்டுப்பொங்கலையொட்டி அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை நடந்தது. 
வஞ்சிரம், வவ்வால், இறால், சுரும்பு, பாறை, வாலை, செங்காலா நண்டு, கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மீன்கள் விலை உயர்வு
 காரைக்கால், திட்டச்சேரி, திருவாரூர், மன்னார்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சில்லறை வியாபாரிகளும், பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒருகிலோ ரூ.550-க்கு விற்ற வஞ்சிரம் மீன் நேற்று 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
ரூ.500-க்கு விற்ற இறால் ரூ.700-க்கும், ரூ.800-க்கு விற்ற வெள்ளை வவ்வால் ரூ 950-க்கும், ரூ.650-க்கு விற்ற நண்டு ரூ.750-க்கும், ரூ.300-க்கு விற்ற சீலா மீன் ரூ.350-க்கும், கருப்புவாவல் ரூ.550-க்கும், பாறை ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டது.
கோடியக்கரை
வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீன் வாங்க  மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதல் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 
விலை உயர்ந்தாலும் அதைபொருட்படுத்தாமல் அசைவப்பிரியர்கள் காலா, ஷீலா, திருக்கை, வாவல், வாலை உள்ளிட்ட மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர். பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story