பண்ருட்டி நர்சிங் பயிற்சி பள்ளி தாளாளர் உள்பட 2 பேர் கைது


பண்ருட்டி நர்சிங் பயிற்சி பள்ளி தாளாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2022 5:47 PM GMT (Updated: 16 Jan 2022 5:47 PM GMT)

3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பண்ருட்டி நர்சிங் பயிற்சி பள்ளி தாளாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி சம்பவத்தன்று பண்ருட்டி-சென்னை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவி படித்துவந்த பண்ருட்டியில் உள்ள எஸ்.என்.ஜே. நர்சிங் பயிற்சி பள்ளி தாளாளரான கடலூர் வண்ணாரபாளையத்தை சேர்ந்த டேவிட் அசோக்குமார்(வயது 39), மேலாளரான பண்ருட்டியை சேர்ந்த நிஷா என்கிற பர்க்பீபி(30), ஆசிரியரான கடலூரை சேர்ந்த அன்பழகன்(32), அலுவலக ஊழியரான விழுப்புரத்தை அடுத்த காணையை சேர்ந்த பிரேம்குமார் (32) ஆகியோர் கடந்த மாதம் 3-ந் தேதி அந்த மாணவியையும், அவருடன் கல்வி பயிலும் 2 மாணவிகளையும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த மருத்துவ முகாமிற்கு  அழைத்து சென்றனர். அங்கு 3 மாணவிக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. 

தாளாளர் கைது 

இதனிடையே மருத்துவ முகாமிற்காக மீண்டும் ஏற்காடு செல்ல தாளாளர் ஏற்பாடு செய்துள்ளதாக மேலாளர் நிஷா அழைத்துள்ளார். இதில் விருப்பம் இல்லாததால் அந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.
மேலும் இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அன்பழகன், உடந்தையாக இருந்த மேலாளர் நிஷா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான தாளாளர் டேவிட் அசோக்குமார், அலுவலக ஊழியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பண்ருட்டி நான்கு முறை சந்திப்பில் நின்றிருந்த 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story