பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள்- பொதுமக்கள் அச்சம்


பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள்- பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 16 Jan 2022 9:07 PM GMT (Updated: 16 Jan 2022 9:07 PM GMT)

பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 
20-க்கும் மேற்பட்ட யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இதில் இரவு நேரத்தில் யானைகள் அடிக்கடி வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள கிராம பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகுந்து விடும் யானைகள் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்திவிட்டு சென்று விடுகின்றன.
இந்த நிலையில் பவானிசாகர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருகே பசுவபாளையம் கிராமத்தையொட்டி உள்ள தரிசு நிலங்களுக்குள் புகுந்தன. 
அச்சம்
பின்னர் அந்த யானைகள் அந்த பகுதியிலேயே சுற்றித்திரிந்தன. யானைகள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததை கண்டதும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். 
இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பகல் நேரத்தில் கிராமத்தையொட்டி உள்ள பகுதியில் யானைகள் சுற்றித்திரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
கோரிக்கை
முழு ஊரடங்கு காரணமாக நேற்று கிராமத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. இருப்பினும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்களை காட்டு யானைகள் தாக்க வாய்ப்புள்ளது. 
எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story