தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Jan 2022 2:57 PM GMT (Updated: 17 Jan 2022 2:57 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதாள சாக்கடை பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?

நெல்லை மேலப்பாளையம்- அம்பை மெயின் ரோட்டில் இருந்து கிரி நகர் வழியாக அண்ணா ஸ்டேடியம் செல்லும் சாலையோரம் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பாதி தூரத்துக்கு பள்ளம் தோண்டிய பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
நிஜா பாத்திமா நதீரா, மேலப்பாளையம்.

உயர்மட்ட பாலம் தேவை

ராதாபுரம் தாலுகா ஊரல்வாய்மொழியில் அனுமன் நதியின் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலத்தில் இந்த பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்லும்போது போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். எனவே, ஊரல்வாய்மொழியில் தரைமட்ட பாலத்துக்கு பதிலாக புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
பகவதி, ஊரல்வாய்மொழி.

போக்குவரத்து நெருக்கடி

மூலைக்கரைப்பட்டி பஜாரில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, மூலைக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அங்கிருந்து நதிநீர் இணைப்பு கால்வாய் கரையோரம் வழியாக பெருமாள்நகர் வரையிலும் பைபாஸ் சாலை அமைத்து, ஒருவழிப்பாதையை செயல்படுத்தினால் போக்குவரத்து நெருக்கடி குறையும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
 மணிகண்டன், கடம்பன்குளம்.

திறக்கப்படாத கழிப்பறைகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் சன்னதி பஜார் கடை வீதிகள், ரத வீதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அங்குள்ள இலவச பொது கழிப்பறைகளும் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை தினமும் அகற்றவும், கழிப்பறைகளை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து முறையாக பராமரிக்கவும் வேண்டும்.
அம்பலவாணன், குற்றாலம்.

சேதமடைந்த மின்கம்பம் 

கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தெற்கு தெருவில் வாறுகால் அருகில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கான்கிரீட் மின்கம்பம் அமைக்க வேண்டும்.
அம்ஜத், முதலியார்பட்டி.

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அம்பலத்தெரு வண்டிமலைச்சி அம்மன் கோவில் அருகில் இருந்த உயர்கோபுர மின்விளக்கின் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனம் மோதியதில் சேதமடைந்தது. இதையடுத்து உயர்கோபுர மின்விளக்கை அகற்றி சாலையோரமாக ைவத்தனர். பின்னர் அதனை சீரமைக்காமல் கிடப்பில் போட்டதால், அப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு மீண்டும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.
சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.

சுகாதாரக்கேடு

தூத்துக்குடி 36-வது வார்டு ராஜகோபாலநகர் மெயின் ரோடு பழைய ராஜேசுவரி தியேட்டர் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்.
வருண், தூத்துக்குடி.

பஸ்கள் நின்று செல்லுமா?

தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலையில் அமைந்துள்ள நாணல்காடு, அகரம், உத்தமபாண்டியன்குளம், அரசு போக்குவரத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்.
 கணேசன், வசவப்பபுரம்.

சேதமடைந்த சாலை

காயல்பட்டினம் பூந்தோட்டம் பத்திரகாளியம்மன் முத்தாரம்மன் கோவில் வடக்கு, தெற்கு வீதிகளில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதேபோன்று காயல்பட்டினம் தைக்கா தெருவில் இருந்து தபால்துறை அலுவலகம் வரையிலும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே, அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும்.
சண்முகவேல், காயல்பட்டினம்.

புதிய கழிப்பறை கட்டப்படுமா?

கயத்தாறு இந்திரா நகரில் உள்ள பொது கழிப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிய கழிப்பறை கட்டிடம் கட்ட வேண்டும்.
கரண், கயத்தாறு.

Next Story