‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Jan 2022 10:19 PM GMT (Updated: 17 Jan 2022 10:19 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் பிரச்சினை
சேலம் மாவட்டம் கொளத்தூர் அம்பேத்கர் நகர பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாய் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் குடிநீர் சரிவர வருவது இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் பலன் அளிக்கவில்லை. குழாயை சரிசெய்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
-கண்ணன், அம்பேத்கர் நகர், கொளத்தூர்.
=====
சுகாதார சீர்கேடு 
சேலம் ஆண்டிபட்டி ஏரி பகுதியில் அரசு வீட்டுவசதி வாரியம் உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. இதனால் தொட்டிக்கு அருகிலும் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், ஆண்டிபட்டி ஏரி, சேலம்.

சேலம் 7-வது வார்டு பாரதிநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குப்பை தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் குப்பைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை அள்ளுகிறார்கள். இதனால் குப்பைகள் ெதாட்டி முழுவதும் நிரம்பி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், பாரதிநகர், சேலம்.
=====
சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மைதானம் மதுபிரியர்களின் புகலிடமாக மாறி விட்டது. ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்த மைதானத்தை பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி மைதானத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
-ராம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி. 
=====
தார்சாலை அமைப்பார்களா? 
சேலம் தளவாய்பட்டி ஏரியில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். பழுதான சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவொரு பயனும் இல்லை. எனவே இந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்ற வேண்டும்.
-பொதுமக்கள், தளவாய்பட்டி, சேலம்.
=====
 தெருவிளக்கு அமைப்பது எப்போது?

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஓம்சக்தி நகர் குடியிருப்பு. இந்த குடியிருப்பில் தெருவிளக்கு இல்லை.  இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஓம்சக்தி நகர், சேலம்.
===
பஸ்கள் நின்று செல்லுமா?

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதி மக்கள் நாமக்கல் செல்ல வேண்டும் என்றால் ராசிபுரம், ஆண்டகளூர்் வழியாக நாமக்கல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரமும், பணமும் வீணாகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் நாமக்கல் செல்லும் பஸ்கள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
===  
தெருநாய்கள் தொல்லை

ஓசூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் வாகன ஓட்டிகள் செல்லும் போது குறுக்கே ஓடி விபத்துக்களை ஏற்படுத்துகிறது. தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களை தெருநாய்கள் கடிக்கின்றன. இரவு நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள் தெருநாய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீஜித், ஓசூர்.
===
அடிப்படை வசதிகள் வேண்டும்

சேலம் மாநகராட்சி உடையாபட்டியை அடுத்த பெருமாள் கோவில் மேடு பஸ் (சேலம்-கடலூர் மெயின்ரோடு) நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர், தார்சாலை மற்றும் தெருவிளக்கு என எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
-சண்முகம், பெருமாள் கோவில் மேடு, சேலம்.

Next Story