சங்கராபுரம் தியாகதுருகம் பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா


சங்கராபுரம்  தியாகதுருகம் பகுதி  முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா
x
தினத்தந்தி 18 Jan 2022 4:11 PM GMT (Updated: 18 Jan 2022 4:11 PM GMT)

சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி முருகன் கோவில்களில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்


சங்கராபுரம்

குந்தவேல் முருகன்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் குந்தவேல் முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக குந்தவேல் முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான், சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள முருகன், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சங்கராபுரம் வள்ளலார் கோவிலில் சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாலமுருகன்

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள பாகம்பிரியாள் உடனுறை நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகனுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலையில் பாலமுருகனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
அப்போது பால்குடம் சுமந்து வந்த பெண்கள் பாலமுருகன் சாமி மீது பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு, ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story