தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 Jan 2022 5:04 PM GMT (Updated: 2022-01-18T22:34:52+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி:
தைப்பூச திருவிழா 
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பக்தர்கள் வழிபட்டனர் 
அந்த வகையில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு வர வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோவில் ஊழியர்களை வைத்து சாமிக்கு பூஜைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தேரில் வள்ளி, தெய்வானை சமேதராய் காட்சி அளித்த முருக பெருமானை பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முருக பெருமானை வழிபட்டனர்.
அக்கொண்டப்பள்ளி முருகன் கோவில் 
வழக்கமாக தைப்பூச திருவிழா அன்று இரவு சாமி தேர், வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தேர் வீதி உலா வரவில்லை. மேலும் கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் சில பக்தர்கள் முதுகில் அலகு குத்தியபடி தேரை இழுத்தவாறும், உடலில் எலுமிச்சைப்பழங்களை குத்தியபடியும் வந்தனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள முருகருக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஊத்தங்கரை அருகே கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். 
ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவிலில் சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நெசவுதெரு சோமேஸ்வரர் கோவிலில் உள்ள உள்ள முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பர்கூர் ஜெகதேவி ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. 
இதே போல மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Next Story