அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசான காரை தட்டிச்சென்ற முரட்டுக்காளையை பார்க்க திரண்ட பொதுமக்கள்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  முதல் பரிசான காரை தட்டிச்சென்ற முரட்டுக்காளையை பார்க்க திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Jan 2022 5:08 PM GMT (Updated: 2022-01-18T22:38:22+05:30)

முதல் பரிசான காரை தட்டிச்சென்ற முரட்டுக்காளையை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.

திருவரங்குளம்:
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கைக்குறிச்சியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 58). ஜல்லிக்கட்டு காளைகள், வாத்து, கோழி, நாய், குதிரை வளர்ப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர் தனது சிறு வயதில் இருந்து மாடுகள், குதிரைகள், வான்கோழி,  உயர் ரக நாய்கள், வாத்து உள்ளிட்டவைகளை தனக்கு சொந்தமான 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில்  வளர்த்து வருகின்றார். 25-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வருகின்றார். உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற இவரது முரட்டுக்காளை கடந்த ஆண்டு நடைபெற்ற விராலிமலை ஜல்லிக்கட்டில் புல்லட் பரிசாக பெற்றதால் அன்று முதல் புல்லட் காளை என்று அழைக்கப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையர்கள் மத்தியில் நின்று விளையாடிய புல்லட் காளையை கண்டு வீரர்கள் ஓடி ஒளிந்த நிலையில், காளையை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த காளை முதல் பரிசாக காரை பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், கைக்குறிச்சி கிராமத்திற்கும் பெருமை சேர்த்தது. காரை பரிசாக பெற்ற ஜல்லிக்கட்டு காளையை கைக்குறிச்சி கிராமமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக வருகை தந்து பார்வையிட்டு உரிமையாளர் தமிழ்செல்வன் மற்றும் காளையை தினந்தோறும் பராமரித்து வரும் பணியாளர்களை பாராட்டிச் செல்கின்றனர். 

Next Story