மஞ்சள், கருப்பு நிறங்களில் சிக்கிய 9 வெடிகுண்டுகள்


மஞ்சள், கருப்பு நிறங்களில்  சிக்கிய 9  வெடிகுண்டுகள்
x
தினத்தந்தி 18 Jan 2022 8:35 PM GMT (Updated: 18 Jan 2022 8:35 PM GMT)

மஞ்சள், கருப்பு நிற பந்துகளை போன்று 9 வெடிகுண்டுகள் சிக்கின. அவை வெடித்து சிதற வாய்ப்பு இருந்ததால் ஓடை மணலில் புதைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

வத்திராயிருப்பு, 
மஞ்சள், கருப்பு நிற பந்துகளை போன்று 9 வெடிகுண்டுகள் சிக்கின. அவை வெடித்து சிதற வாய்ப்பு இருந்ததால் ஓடை மணலில் புதைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
3 வாலிபர்கள் ஓட்டம் 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் அர்ச்சுனாபுரத்தில் பெரிய ஓடை உள்ளது. இந்த ஓடை பகுதியில் இருந்து மூலக்காடு செல்லும் பகுதியில் நேற்று காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். 
இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் உடனே இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார், மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வெடிகுண்டுகள் சிக்கின
பின்னர் அப்பகுதியில் உள்ள பெரிய ஓடைப்பகுதி மற்றும் சாலையோர முட்புதர்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது ஓடையில் உள்ள முட்புதருக்குள் இரு பைகள் கிடந்தன. அவற்றை எடுத்து பார்த்த போது, அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தன.  அந்த நாட்டு வெடிகுண்டுகளுடன் மேல்பகுதியில் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் டேப் சுற்றப்பட்டு கருப்பு, மஞ்சள் நிற பந்துகளை போன்று  காட்சி அளித்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது, அவை அனைத்தும் நாட்டு வெடிகுண்டு வகையை சேர்ந்தது என தெரியவந்தது.
ஓடையில் புதைத்து வைப்பு
வெப்பம் காரணமாக அந்த நாட்டு வெடிகுண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய போலீசார், அவற்றை ஓடை பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்தனர். அந்த பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க கயிறு கட்டி கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 21), புஷ்பராஜ் (22), சின்னச்சாமி (20) ஆகிய 3  பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story