முருகன் கோவில்களில் தைப்பூச விழா


முருகன் கோவில்களில் தைப்பூச விழா
x
தினத்தந்தி 18 Jan 2022 9:07 PM GMT (Updated: 18 Jan 2022 9:07 PM GMT)

முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடந்தது.

பெரம்பலூர்:

சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூரில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடந்தது. இதில் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 42-வது ஆண்டு தைப்பூச விழா நேற்று நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு கணபதி ஹோமமும், மூலவர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. ஹோமம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.
மேலும் பெரம்பலூர் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியசாமி சன்னதியிலும், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பக்தர்கள் ஏமாற்றம்
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் சண்முக சுப்ரமணியர், வள்ளி தேவசேனா சிலைகளுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தைப்பூச தேரோட்டத்திற்கு அரசு அனுமதிக்காததால் பெரம்பலூர் பாலமுருகன் கோவில் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் சார்பில் அருட்பிரகாச வள்ளலார் ஜோதி வடிவில் ஐக்கியம் அடைந்த தினமான தைப்பூசத்தை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள கருணை இல்லம், செஞ்சேரி வித்பாஸ்ரமம் ஆகிய தன்னார்வ தொண்டு இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் வழக்கறிஞர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் நாராயணசாமி உள்பட சன்மார்க்க சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story