பரவாக்கோட்டையில் விவசாயிகள் சாலைமறியல்


பரவாக்கோட்டையில் விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 19 Jan 2022 3:37 PM GMT (Updated: 2022-01-19T21:07:10+05:30)

நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி பரவாக்கோட்டையில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடுவூர்:
நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி பரவாக்கோட்டையில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
சாலைமறியல் 
மன்னார்குடி பகுதியில் சம்பா நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். இந்தநிலையில் பரவாக்கோட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி மன்னார்குடி மதுக்கூர் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு 
தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மையத்திற்கு பட்டியல் எழுத்தர் நியமிக்கப்பட்டு உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story