திருமயம் அருகே குலமங்கலம் ஜல்லிக்கட்டில் ஆர்ப்பரித்த காளைகள் 23 பேர் காயம்


திருமயம் அருகே  குலமங்கலம் ஜல்லிக்கட்டில் ஆர்ப்பரித்த காளைகள்  23 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Jan 2022 4:41 PM GMT (Updated: 19 Jan 2022 4:41 PM GMT)

திருமயம் அருகே குலமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆர்ப்பரித்த காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.

திருமயம்:
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குலமங்கலத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி மலையக்கோவில் சுப்பிரமணியசாமி திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. 
முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
23 பேர் காயம்
காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க நாணயங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை மற்றும் திருமயம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் குலமங்கலம் பொதுமக்கள் செய்திருந்தனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

Next Story