கொள்முதல் நிலையங்கள் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை


கொள்முதல் நிலையங்கள் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2022 4:55 PM GMT (Updated: 2022-01-19T22:25:41+05:30)

நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய ஏதுவாக கொள்முதல் நிலையங்கள் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

மன்னார்குடி:
நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய ஏதுவாக கொள்முதல் நிலையங்கள் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். 
கலந்துரையாடல் கூட்டம் 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாக திறக்கப்பட்ட உதவி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இணைய வழியில் நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் எஸ்.பிரபாகர், செல்வராசு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சித்ரா, மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
பேட்டி 
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 
அதைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக 1,400 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த 4 மாவட்டங்களிலும் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
7 பேர் கொண்ட குழு 
உத்தேசிக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர, தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் 2 விவசாயிகளையும், மற்ற அதிகாரிகளையும் உள்ளடக்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த குழு விவசாயிகள் எந்த இடத்தில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்கிறார்களோ? அது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
இரவு 8 மணி வரையில்
தஞ்சையில் 191, திருவாரூரில் 450, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 115 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விட்டன. 
மேலும் நெல்கொள்முதல் நிலையங்களில் விரைவாக கொள்முதல் செய்யும் வகையில் இரவு 8 மணி வரை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய ஏற்பாடு
கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கு ஆன்லைன் பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இந்த  திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஆன்லைன் பதிவு நடைமுறையை கைவிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 
ஆனாலும் தற்போது கொள்முதல் தொடங்க இருப்பதால் விவசாயிகள் ஆன்லைன் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே ஆன்லைன் பதிவு செய்ய தெரியாத நிலையில் உள்ள விவசாயிகள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்திலேயே பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரவைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிற நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட்டு அரவைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த ஒரு இடத்திலும் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்படவில்லை. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 21 பொருட்களை கொண்டு வழங்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளிலும் கலர் ஷெட்டர் பொருத்தப்பட வேண்டும். இதனை கடந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 26 நவீன அரிசி ஆலைகளில் 8 ஆலைகளுக்கு கலர் ஷெட்டர் பொருத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 18 ஆலைகளுக்கு பொருத்துவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story