திருச்செங்கோடு அருகே பயங்கரம் லாரி பட்டறை தொழிலாளி குத்திக்கொலை நண்பர் கைது


திருச்செங்கோடு அருகே பயங்கரம் லாரி பட்டறை தொழிலாளி குத்திக்கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2022 6:04 PM GMT (Updated: 2022-01-19T23:34:14+05:30)

திருச்செங்கோடு அருகே லாரி பட்டறை தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்

எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே லாரி பட்டறை தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது ெசய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி பட்டறை தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பருத்திப்பள்ளி நாடார் தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 27). லாரி பட்டறை தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிவாம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே பகுதியை சேர்ந்தவர் கோபி (23). பஞ்சர் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். உமாசங்கரும், கோபியும் நண்பர்கள் ஆவர்.
இந்த நிலையில் நண்பர்கள் 2 பேரின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு தைப்பூசத்தையொட்டி அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலில் பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது உமாசங்கர், கோபி மற்றும் சிலர் கோவில் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஒருவரை ஒருவர் துரத்தி பிடித்து விளையாடியதாக தெரிகிறது. அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தகராறு
இவ்வாறு விளையாடி கொண்டிருந்தபோது உமாசங்கருக்கும், கோபிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, நண்பர் என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாசங்கரை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உமாசங்கர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி சிவாம்பிகா எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்போில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நண்பரை கத்தியால் குத்தி கொன்றதாக கோபியை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு ேவறு காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் லாரி பட்டறை தொழிலாளியை நண்பரே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story