வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 20 Jan 2022 5:12 PM GMT (Updated: 20 Jan 2022 5:12 PM GMT)

விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம்  அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும், நுகர்பொருட்களை பதுக்குதல், கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பணியிலும்  மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் பறக்கும் படையினரும் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் அருகே வீரமூர் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் ஜக்குபாய் என்பவருடைய வீட்டு வாசல் அருகில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

4¼ டன் பறிமுதல்

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையிலான பறக்கும் படை குழுவினர், வீரமூர் கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜக்குபாய் வீட்டின் வாசல் பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 86 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் 4,300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த அரிசியை யார் பதுக்கி வைத்திருந்தனர். இந்த அரிசியை மாவாக்கி வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்றும், இந்த பதுக்கலில் ஜக்குபாய்க்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு யார், யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story