முககவசம் அணியாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி


முககவசம் அணியாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 20 Jan 2022 7:30 PM GMT (Updated: 20 Jan 2022 7:30 PM GMT)

நெல்லையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நெல்லை:
நெல்லையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை நாட்களையொட்டி மக்கள் கூட்டம் அதிகமானதால் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. நேற்று 756  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவலை தடுக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றையும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள்.

தனிமைப்படுத்தி சிகிச்சை
இந்த நிலையில் நெல்லை மாநகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில் லேசான பாதிப்பு ஏற்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுமாறு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையே, முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுவோர் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

கட்டாய பரிசோதனை
இதனை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். நெல்லை டவுனில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை டவுன், கே.டி.சி. நகர் சோதனைச்சாவடி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சுகாதார மருத்துவ குழுவினரும் இந்த திடீர் சோதனையை நடத்தினர். அப்போது முக கவசம் அணியாமல் அலட்சியமாக வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறதா? என்பதை கண்டறிய கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர போலீசார் மற்றும் பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து ஆர்வத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

Next Story