மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்


மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 20 Jan 2022 7:41 PM GMT (Updated: 20 Jan 2022 7:41 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நெல்லை மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நெல்லை:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நெல்லை மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

பூஸ்டர் தடுப்பூசி
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரு தவணைகளாக செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா உருமாறி ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இதையடுத்து இருதவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமைதோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

20 இடங்களில்...
 நெல்லை மாவட்டத்தில் ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, 6 அரசு ஆஸ்பத்திரிகள், 4 மாநகராட்சி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது.
இங்கு முதியோர் மற்றும் முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆர்வத்துடன் வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் சிலருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம். தற்போது சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக வியாழக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மற்ற நாட்களிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.
2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 39 வாரங்களுக்கு பிறகு, கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் 3 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே 2 தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட அதே தடுப்பூசி மருந்தை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியாக போட வேண்டும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின்கீழ் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0462-2501070, 2501012, 6374013254 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story