கார் மோதி டிராக்டர் மெக்கானிக் சாவு


கார் மோதி டிராக்டர் மெக்கானிக் சாவு
x
தினத்தந்தி 21 Jan 2022 2:49 PM GMT (Updated: 21 Jan 2022 2:49 PM GMT)

விழுப்புரத்தில் கார் மோதி டிராக்டர் மெக்கானிக் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள், விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் வழுதரெட்டி காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40), டிராக்டர் மெக்கானிக்.
இவர் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை உபாதை  கழிக்க வழுதரெட்டி சுடுகாட்டு பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் குணசேகரன் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குணசேகரன் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்நிலையில் குணசேகரனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் 2.45 மணியளவில் விழுப்புரம் வழுதரெட்டி புறவழிச்சாலைக்கு திரண்டு வந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விபத்துக்கு காரணமான கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இறந்த குணசேகரனின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை. பின்னர் விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், தாசில்தார் ஆனந்தகுமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்துக்கு காரணமான கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் மாலை 3.15 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

Related Tags :
Next Story