குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு


குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2022 4:49 PM GMT (Updated: 2022-01-21T22:19:03+05:30)

தாராபுரம் நகராட்சி பகுதிகளில் குவியும் குப்பைகளுக்கு பணியாளர்கள் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம்
தாராபுரம் நகராட்சி பகுதிகளில் குவியும் குப்பைகளுக்கு பணியாளர்கள் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கும்,மக்காத குப்பைகள்
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் வீடுகளில் சேரும் குப்பைகளை காலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பெற்று செல்வார்கள். அவ்வாறு பெற்றுச் செல்லும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரித்து அதை தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை மையத்தில் சேர்த்துவிடுவர்.
 ஆனால் தாராபுரம் நகராட்சி பணியாளர்கள் அலங்கியம்ரோடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில், எல்.ஜி.ஜி.எஸ் காலனி, பீமர்மெயின் வீதி, கீதா நகர், கருர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுவதில்லை. இதனால் பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
தீ வைக்கும் பணியாளர்கள்
 இதையடுத்து இப்பகுதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். அதோடு இரவு நேரங்களில் மருத்துவகழிவுகளும் கொட்டப்படுகிறது. இது அதிக அளவில் குவிந்து விடுகிறது. இதை அங்கு சுற்றும் நாய்கள் இழுத்து சாலைகளில் போடுகிறது. இதுகுறித்து நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அங்கு வரும் பணியாளர்கள் அந்த குப்பைகளை முறையாக அகற்ற சிரமப்பட்டு தீ வைத்து விடுகின்றனர். 
இதனால் பல மணிநேரம் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சற்றுக்கவனக்குறைவு ஏற்பட்டாலும் பொதுமக்களின் உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் தீ வைக்கும் நடவடிக்கையை கைவிட பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
 போதிய பணியாளர்களை நியமித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று வீடுகளில் சேகரமாகும்,மக்கும்,மக்காத குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மருத்துவகழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Next Story