கல்லூரி மாணவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது


கல்லூரி மாணவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2022 10:37 PM GMT (Updated: 21 Jan 2022 10:37 PM GMT)

கல்லூரி மாணவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:

முகநூலில் அறிமுகமானவர்
சேலம் மாவட்டம், கே.மோரூரை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் ரினேஷ் (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். ரினேசுக்கு இணையதளத்தில் முகநூல் (பேஸ்புக்) மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் குறைந்த விலையில் செல்போன் மற்றும் மடிக்கணினி (லேப்டாப்) போன்றவற்றை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளார்.
ஆனால் அந்த நபர் கூறியதைப்போல் செல்போன், மடிக்கணினி போன்றவற்றை ரினேசுக்கு வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
பெங்களூருவில் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த ரினேஷ் இது தொடர்பாக கடந்த 19-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இணையதள யுக்திகளை பின்பற்றி அந்த நபரை வலைவீசி தேடி வந்தனர். மேற்படி இணையதளத்தில் மோசடி செய்த நபர் பெங்களூருவில் இருப்பதை அறிந்து, அங்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா (தொழில்நுட்பம்), போலீஸ்காரர்கள் வேல்முருகன், முத்துசாமி, சதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விரைந்தனர்.அங்கு அந்த நபரை பிடித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்ததில், அவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சின்னசாமி தெருவை சேர்ந்த உலகமுத்துவின் மகன் ஜெகன்(29) என்பதும், என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 2 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜெகனை கைது செய்த போலீசார் பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
பாராட்டு
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டினார். பொதுமக்கள் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “155260” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். மேலும் சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதியவும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Next Story