மதம்மாற கட்டாயப்படுத்தியதாக புகார்: தற்கொலை செய்த மாணவி - உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்


மதம்மாற கட்டாயப்படுத்தியதாக புகார்: தற்கொலை செய்த மாணவி - உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்
x
தினத்தந்தி 22 Jan 2022 1:53 AM GMT (Updated: 22 Jan 2022 2:02 AM GMT)

தஞ்சை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர்.

தஞ்சாவூர், 

தஞ்சை அருகே தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் ஒப்படைக்க முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளி அருகே உள்ள விடுதியில் அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதால் மனஉளைச்சலில் இருந்த லாவண்யா கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து விட்டார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவர் திருக்காட்டுப்பள்ளி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி(62) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா கடந்த 19-ந் தேதி மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கு மத்தியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையின்போது, லாவண்யாவிடம் எடுக்கப்பட்ட வீடியோவில் மதமாற்றம் செய்வது தொடர்பான சர்ச்சை தகவல்கள் வெளியானதால் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். மேலும் மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், எனது மகளை மதம் மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அவரை திட்டி, அதிகமாக வேலைவாங்கியதால் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிகிச்சையின்போது லாவண்யா அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

தற்போது லாவண்யாவின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார்.

நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மாணவி லாவண்யாவின் உடலை பெற பெற்றோர், உறவினர்கள் வருவார்கள் என போலீசார் காத்து இருந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்கி கொள்வோம் என பெற்றோர் கூறியதுடன் உடலை பெற்றுச் செல்ல வரவில்லை. இதனால் பிரேத பரிசோதனை முடிந்து 2 நாட்கள் ஆகியும் உடலை ஒப்படைக்க முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள். எனினும் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் தங்கள் மகள் இறந்து விட்டதாக மாணவியின் பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோரிடம் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் நேற்று மாலை 5.30 மணிக்கு விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணை இரவு 7.15 மணி வரை நடந்தது.

விசாரணை முடிந்து வெளியே வந்த மாணவியின் சித்தி சரண்யா கூறுகையில், “எங்கள் மகளை மதமாற்றம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் அவள் மனதுக்குள் காயப்பட்டு வந்துள்ளார். மேலும் விடுதியில் கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லியும், பாத்திரங்கள் கழுவ சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் அவள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவளை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கே இந்த நிலை என்றால் மற்ற மாணவிகள் நிலை என்னவாகும். எங்களுக்கு நியாயம் வேண்டும். எங்களுக்கு நடந்த அநீதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது” என்று அவர் கூறினார்.

Next Story