உறைபனியால் கருகும் தேயிலை செடிகள்


உறைபனியால் கருகும் தேயிலை செடிகள்
x
தினத்தந்தி 24 Jan 2022 12:43 PM GMT (Updated: 24 Jan 2022 12:43 PM GMT)

மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் வைக்கோல்களை பரப்பி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

ஊட்டி

மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் வைக்கோல்களை பரப்பி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

உறைபனி தாக்கம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் உறைபனி தாக்கம் நிலவுகிறது. அவ்வபோது காலநிலை மாற்றங்களால் உறைபனி குறைந்தாலும், கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வறண்ட காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறி செடிகள் வாடிப்போய் காட்சி அளிக்கிறது. 

பனியில் இருந்து காய்கறி பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் அதிகாலை, மாலை ஆகிய நேரங்களில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மண் மற்றும் செடிகளில் ஈரத்தன்மை இருந்தால் உறைபனி தாக்கம் செடிகளை பாதிக்காது. இதனால் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நிழல் போன்ற பாதுகாப்பு

இந்த நிலையில் நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளான குந்தா, அவலாஞ்சி, கோரகுந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. மேலும் பச்சை தேயிலை மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

எனவே உறைபனியால் தேயிலை செடிகள் கருகாமல இருக்க தேயிலை செடிகள் மீது வைக்கோல், காய்ந்த பிற செடிகளை கொண்டு மூடி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் தேயிலை செடிகள் மீது உறைபனி விழுவது தடுக்கப்படும். நிழல் போன்று வைக்கோல் பாதுகாப்பு தருவதால் தேயிலை கருகாமல் இருக்கும். மேலும் பகலில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. 

மழை பெய்தால் மட்டுமே...

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது-
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள் கருகாமல் இருக்க வைக்கோல் கொண்டு மூடி பாதுகாத்து வருகிறோம். இதன் மூலம் நேரடியாக செடிகள் மீது பனி கொட்டாது. உறைபனியால் இலைகள் கருகுவதோடு, கொழுந்து இலைகள் வளராமல் போகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. 

தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கப்படும் பச்சை தேயிலை அளவு குறைந்து வருகிறது. உறைபனி காரணமாக தேயிலை கொள்முதல் குறைவால் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி குறையும் நிலை காணப்படுகிறது. நல்ல மழை பெய்தால் மட்டுமே பனியில் இருந்து தேயிலை செடிகளை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story