ராணிப்பேட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை


ராணிப்பேட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
x
தினத்தந்தி 24 Jan 2022 6:17 PM GMT (Updated: 24 Jan 2022 6:17 PM GMT)

ராணிப்பேட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குடியரசுதின விழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.‌

 தொடர்ந்து அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், காவலர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

அனுமதி இல்லை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளதால் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகமாகக் கூட்டம் கூடுவதை தவிர்க்க விழா நடைபெறும் மைதானத்திற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் வீடு தேடி சென்று சால்வை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்கள்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மைதானத்திற்குள் வரும் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story