ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டம்


ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:51 PM GMT (Updated: 24 Jan 2022 6:58 PM GMT)

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள கோட்டகம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் சுமார் 30 குடும்பத்தினர் நீர் நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் தனிநபர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் அதிகாரிகள், வீடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் வீசி எறிந்தனர்.

போராட்டம்

தொடர்ந்து கிராம மக்கள், தாங்கள் வசித்து வரும் இடத்திற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். தங்களின் வீடுகளை காலிசெய்ய வற்புறுத்தக்கூடாது எனவும், கோட்டகம் கிராம மக்களை அகதிகளாக ஏற்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி யாரேனும் 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கோரிக்கைகள் தொடர்பான மனு, அளியுங்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story