போலீஸ் நிலையத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


போலீஸ் நிலையத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jan 2022 7:42 PM GMT (Updated: 26 Jan 2022 7:42 PM GMT)

வத்திராயிருப்பு அருகே போலீஸ் நிலையத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்திராயிருப்பு, 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை  சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. இவரது தோட்டத்து அருகில் ஜோதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. ஜெயலட்சுமி தனது தோட்டத்துக்கு செல்ல ஜோதீஸ்வரிக்கு சொந்தமான இடம் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜோதீஸ்வரி தனது இடத்தில் மரக்கட்டைகளை போட்டு வழியை மறித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெயலட்சுமி தோட்டத்துக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து அவர் கூமாப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணைக்கு இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். அதன்படி  ஜெயலட்சுமி, தனது மகன் ராஜாவுடன் (வயது 38) போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அதேபோல ஜோதீஸ்வரியும் வந்தார். இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்  சமரசம் ஏற்படவில்லை. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது போலீஸ் நிலைய வளாகத்தில் ராஜா மற்றும் ஜெயலட்சுமி  தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டனர். இது குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story