கூலி உயர்வு கேட்டு சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்


கூலி உயர்வு கேட்டு சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:55 PM GMT (Updated: 27 Jan 2022 5:55 PM GMT)

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூலி உயர்வு கேட்டு சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூலி உயர்வு கேட்டு சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல் மூட்டைகள் தேக்கம்

சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு விவசாயிகள் ெநல் மூட்டைகளை கொண்டு வந்து விற்கிறார்கள். அந்த நெல்லை, வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். 

அங்கு வேலை பார்க்கும் கோணிப்பைகளை மாற்றி சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் கூலி உயர்வு கேட்டு நேற்றுமுன்தினமும், ேநற்றும் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்கியது. இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வர முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து சுமைத்தூக்கும் தொழிலாளர்களிடம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தினேஷ் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதில் எந்த சுமுக முடிவும் எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் தர்மராஜ் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வந்தார். 

பின்னர் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் சங்க தலைவர் தண்டபாணி மற்றும் வியாபாரிகள் அனைத்து வணிகர் சங்க செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க.வை சேர்ந்த அனாதிமங்கலம் பழனி, சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமைத் தூக்கும் தொழிலாளர்களின் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேலைக்கு திரும்பினர்

இதில் வழக்கமாக கோணிப்பை மாற்ற கூலி ரூ.8 ஆகவும், மூட்டைகளை லாரியில் ஏற்ற ரூ.8 ஆகவும், லாரி லோடு ஏற்ற மாமுல் ரூ.3 ஆகவும் இருந்து வந்தது. 

பேச்சுவார்த்தையில் கோணிப்பை மாற்ற ரூ.9, லாரியில் மூட்டைகளை ஏற்ற ரூ.9, லாரியில் லோடு ஏற்ற மாமுல் ரூ.3.50 என உயர்த்தி வழங்க வியாபாரிகள் முன்வந்தனர். 

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாலும், போதிய கூலி உயர்வும் கிடைத்ததாலும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பினர்.

Next Story