தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 27 Jan 2022 6:50 PM GMT (Updated: 27 Jan 2022 6:50 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், கோ. அபிஷேகபுரம் கோட்டம், 51-வது வார்டு , ஆட்டு மந்தை தெருவில்  சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகராஜன், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம்,  துறையூரில் இருந்து பச்சமலை செல்வதற்கு  உப்பிலியபுரம், சோபனபுரம், டாப் செங்காட்டுப்பட்டி வரை சுமார் 20 கிலோ மீட்டர் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த டாப் செங்காட்டுப்பட்டி, பூதக்கால், சோளமாத்தி, கீழ்கரை, தண்ணீர் பள்ளம், கம்பூர் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லமாத்தி, மாயம் பாடி, சேந்தகம், மங்களம், மங்களம் அருவி ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் சென்று வருகிறது. இதில் மலைப்பாதையான டாப் செங்காட்டுப்பட்டி முதல் சோபனபுரம் வனத்துறை சோதனைச் சாவடி வரை உள்ள தார்ச்சாலை கடந்த மாதம் பெய்த மழையால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பச்சமலை, திருச்சி.

வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, நடுகள்ளர்தெருவில் பொது குடிநீர் குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பிச்சாண்டார்கோவில், திருச்சி.

நாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், பூக்கொல்லை தெரு, ஜின்னா திடல் , அலங்கநாதபுரம்,  வீரமாநகரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து  வருகிறது. இரவு நேரங்களில் பணி முடிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை நாய்கள் கூட்டம், கூட்டமாக வந்து துரத்துகிறது. இதனால் சில நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சையது முஸ்தபா,  அரியமங்கலம், திருச்சி.

அரசு பஸ் நீட்டிக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து நம்பர் ஒன் டோல்கேட் வரை தடம் எண்-3-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அந்த பஸ்சை முசிறியில் இருந்து சத்திரம் அல்லது சமயபுரம் வரை நீட்டித்தால் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், முசிறி, திருச்சி.


Next Story