கிணத்துக்கடவில் போலி தங்க கட்டியை கொடுத்து தம்பதியிடம் ரூ 5 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது


கிணத்துக்கடவில் போலி தங்க கட்டியை கொடுத்து தம்பதியிடம் ரூ 5 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2022 3:36 PM GMT (Updated: 2022-01-28T21:06:11+05:30)

கிணத்துக்கடவில் போலி தங்க கட்டியை கொடுத்து தம்பதியிடம் ரூ 5 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் போலி தங்க கட்டியை கொடுத்து தம்பதியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரியல் எஸ்டேட் அதிபர்

கோவை மாவட்டம் நீலாம்பூர் முதலிபாளையம் ரங்காநகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் (வயது 43). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நெசிலா (40). கடந்த 20-ந் தேதி ஷேக்அலாவுதீன் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு  ஒருவர் பேசினார். அப்போது என்னிடம் தங்க கட்டி ஒன்று இருப்பதாகவும், அது சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்றும் கூறினார். மேலும் அந்த தங்க கட்டிக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் போதும், அதனை தங்களிடம் கொடுத்துவிடுவதாகவும், பணத்தோடு கிணத்துக்கடவு பஸ் நிலையத்திற்கு வரும்படி தெரிவித்தார். 

ரூ.5 லட்சத்துக்கு தங்கம்

இதனையடுத்து ஷேக் அலாவுதீன் , நெசிலா ஆகிய இருவரும் ரூ.5 லட்சத்துடன் கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு 3 பேர் ஒரு பையுடன் நின்றதை அவர்கள் கவனித்தனர். அதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மட்டும் தம்பதியிடம் சென்று, தங்க நிறத்தில் இருந்த ஒரு கட்டியை கொடுத்து ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். அப்போது ஷேக்அலாவுதீன் ரூ.5 லட்சம் மட்டும் இருப்பதாகவும், இதனை பெற்றுக்கொண்டு தங்க கட்டியை தரும்படியும் மீதி தொகையை பிறகு தருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு 3 பேரும் தங்க கட்டியை தம்பதியிடம் கொடுத்தனர். இந்தநிலையில் சுமார் 2 கிலோ எடைகொண்ட அந்த தங்க கட்டியை ஷேக்அலாவுதீன், நெசிலா தம்பதியினர் சோதனை செய்தனர். அப்போது அந்த தங்க கட்டி தங்க முலாம் பூசப்பட்ட உலோக கட்டி என தெரியவந்தது. இதனால் அவர்கள் போலி தங்க கட்டியை ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கி ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுபற்றி கிணத்துக்கடவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி தங்க கட்டியை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், போலீசார் வினோத்சர்மா மெர்க்குரி, பிரபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். 

3 பேர் கைது

இந்த நிலையில் பொள்ளாச்சி மின்நகர் மாக்கினாம்பட்டி ரோட்டை சேர்ந்த நிஜாம் சின்னபாவா (44), சூளேஷ்வரன்பட்டியை சேர்ந்த உசேன் அலி (34), ஆனைமலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (53) ஆகிய 3 பேரும் சேர்ந்துதான் கோவை தம்பதியிடம் போலி தங்க கட்டியை கொடுத்து ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  

Next Story