நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த தடை


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த தடை
x
தினத்தந்தி 28 Jan 2022 4:32 PM GMT (Updated: 28 Jan 2022 4:32 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்க கூடாது என்றும் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
இதற்கு பொறுப்பு கலெக்டரும், கூடுதல் கலெக்டருமான ரஞ்ஜீத்சிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊர்வலம்

மாநில தேர்தல் ஆணையம்வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். வாக்குகளை பெறுவதற்காக  சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் பிற வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக  பயன்படுத்தக்கூடாது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கக்கூடாது. தேர்தல் பயன்பாட்டிற்காக தேசிய கொடி அல்லது தேசிய சின்னங்களை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு முடிவுற நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்து முந்தைய 48 மணி நேரத்தில் பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.

பொதுக்கூட்டம் நடத்த தடை

பொது இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உள் அரங்கங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பிரசார கூட்டங்களை நடத்த அனுமதி அளிக்கப்படும். இதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். வாக்குப்பதிவு நாள் அன்றும், அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் போதையூட்டும் மது அல்லது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வழங்குவதோ அல்லது வினியோகிப்பதோ கூடாது.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது, அதிகபட்சமாக வேட்பாளரையும் சேர்த்து 3 பேர் மட்டும் வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்கு சேகரிக்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, அ.தி.மு.க. அய்யனார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர்கள் லெனின், பானுசந்தர், மாவட்ட அவை தலைவர் பாலு, பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுந்தர்ராஜா உள்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story