நெல்லை அருகே விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: ரெயில்வே அதிகாரி கார் ஏற்றி கொலை


நெல்லை அருகே விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: ரெயில்வே அதிகாரி கார் ஏற்றி கொலை
x
தினத்தந்தி 28 Jan 2022 6:18 PM GMT (Updated: 28 Jan 2022 6:18 PM GMT)

நெல்லை அருகே விபத்து வழக்கில் திடீர் திருப்பமாக, ரெயில்வே அதிகாரி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது. இதையடுத்து விபத்து நாடகமாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது 56). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 16-ந்தேதி இரவில் வேலை முடிந்ததும் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். நெல்லை அருகே புளியங்குளம் பரும்பு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக சென்ற கார் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த செந்தாமரை கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் செந்தாமரை கண்ணன் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி சென்றதும், தொடர்ந்து பெட்ரோல் பங்க் அருகில் நீண்ட நேரமாக நின்ற கார் செந்தாமரை கண்ணனை பின்தொடர்ந்து சென்றதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த காரின் பதிவு எண்ணை கண்டறிந்து, அதன் உரிமையாளரான வல்லநாட்டைச் சேர்ந்த மகேஷிடம் (33) விசாரணை நடத்தினர்.

இதில், அந்த காரை மகேஷ் ஓட்டிச் ெசன்றதும், அந்த காரில் அவருடைய நண்பர்களான வல்லநாடு அருகே கலியாவூரைச் சேர்ந்த சொரிமுத்து மகன் சுடலைமணி (29), நெல்லை மூளிக்குளத்தைச் சேர்ந்த ஜெகன் பாண்டியன், வல்லநாடு பக்கப்பட்டியைச் சேர்ந்த கந்தகுமார், மார்த்தாண்டம் ஆகிய 4 பேரும் இருந்ததும் தெரியவந்தது. இவர்கள் திட்டமிட்டு செந்தாமரை கண்ணன் மீது காரை ஏற்றி கொலை செய்ததும், பின்னர் விபத்தில் அவர் இறந்தது போன்று நாடகமாடி தப்பி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மகேஷ், சுடலைமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

கொலை செய்யப்பட்ட செந்தாமரை கண்ணனின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆகும். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஆலிவர் மகன் சாம்ராட்டுக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சாம்ராட் கோவா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றபோது, ரெயில் விபத்தில் இறந்தார். இதையறிந்த செந்தாமரை கண்ணன் சமூக வலைதளத்தில் சாம்ராட் இறந்தது தொடர்பாக ‘இது இறைவனின் தண்டனை’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாம்ராட்டின் நண்பர்களான மகேஷ் உள்ளிட்ட 5 பேரும் செந்தாமரை கண்ணனை காரை ஏற்றி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெகன் பாண்டியன், கந்தகுமார், மார்த்தாண்டம் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே விபத்து வழக்கில் திடீர் திருப்பமாக ரெயில்வே அதிகாரியை காரை ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story